பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலியாக, முகநூல் பக்கத்தில் இருந்த பழநி திருஆவினன்குடி கோயில் மூலவர் படத்தை பாஜகவினர் நீக்கியிருக்கிறார்கள்.. 

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பாஜ சார்பில் கடந்த 23ம் தேதி வேல் யாத்திரை நடந்தது. கொரோனா கால சமூக இடைவெளியின்றி பொதுக்கூட்டம் நடத்தியது, வின்ச்சில் பாஜகவினர் கூட்டமாக சென்றது ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பாஜவினர் கொண்டு வந்த வேலை மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் உள்ள கருவறையில் வைத்து வழிபாடு செய்யவும் வற்புறுத்தினார். ஆனால் அதை கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.  

இந்த நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன், கருவறையை நோக்கி சாமி கும்பிடுவது போன்ற படம் பாஜகவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த படத்தில் திருஆவினன்குடி மூலவர் உருவம் பதிவாகி இருந்தது. இதுவும் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதல்வர், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பாஜகவினர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த முருகன் மூலவர் படத்தை அகற்றியுள்ளனர்.