288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந்தேதி வெளியான தேர்தல் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

முதலமைச்சர்  பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் அக்கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துகொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.  மராட்டிய முதலமைச்சராக  தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.  அவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியானது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது.