மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனா முதலமைச்சர்  பதவியை கேட்டது. ஆனால் பா.ஜனதா விட்டுத்தர மறுத்து விட்டது. இந்த மோதலால் புதிய அரசு அமைப்பதில் முட்டுக்கட்டை உருவானது.

இந்த  பரபரப்பான சூழ்நிலையில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதால், சிவசேனாவுக்கு அவர் அழைப்பு விடுத்து இருக்கிறார். 

ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று  இரவு 7.30 மணிக்குள் தனக்கு தெரிவிக்குமாறு சிவசேனாவை கவர்னர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்  ஆதரவுடன் அரசு அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா செய்தியாளர்களிடம் பேசினார்.  

அப்போது சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உடன் கூட்டணி அமைத்ததால் மராட்டியத்தில்  பாஜகவால் காலூன்ற முடிந்தது. தற்போது சிவசேனாவை புறந்தள்ளி ஆட்சியமைக்க விரும்பும் பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பாடம் புகட்ட நினைக்கிறார்.  

பாஜகவுக்கு பாடம் புகட்ட விரும்பும் சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும். சிவசேனாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அப்போது தான் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு  நம்பிக்கை ஏற்படும்.