இனி இந்து உணர்வுகளை யாரும் காயப்படுத்த வேண்டாம் என அமைச்சர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார். இப்போது முன்பைவிட இந்து விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிற காரணத்தினால் திமுக அதில் மிகக் கவனமாக இருந்து வருகிறது.

எம்ஜிஆர் காலம் முதலே சிறுபான்மையினர் அதிமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்றும், அதை பெற முயற்சிப்பது பலனளிக்காது என்றும், அதிமுக-திமுக யாராக இருந்தாலும் இனி இந்துக்களின் வாக்குகளை குறி வைத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கூறி கூட்டணியை விட்டு விலகிய அதிமுக, கடந்த தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ராம சீனிவாசன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எதிர்த்து நின்ற அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு அதிமுக மிக மோசமான அளவிற்கு தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. அப்போது அதிமுகவுக்கு தோல்வியே கிடைத்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால்தான் தோல்வி அடைந்தோம் என அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கேபி முனுசாமி போன்றோர் விமர்சித்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இஸ்லாமியர்கள் வாக்களித்திருந்தால் நிச்சயம் தான் வெற்றிபெற்றிருப்பேன் என்றும் சிவி சண்முகம் காட்டமாக பேசியிருந்தார்.

அது அப்போது அதிமுக-பாஜக கூட்டணிக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே இடப்பங்கீடு எட்டப்படாத நிலையில், அதிமுக-பாஜக தனித்தனியே தேர்தலை சந்தித்தன. ஆனாலும் இந்தத் தேர்தலில் அதிமுக முன்பைவிட மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஏன் வெற்றிபெற முடியவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் சொந்த கட்சி தொண்டர்களே அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதுதான் அதிமுக தோல்விக்கு காரணம் என்றும், பாஜகவுடன் கூட்டணியால்தான் சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்று கூறுவது ஏற்கமுடியாது என்றும், எப்போதுமே சிறுபான்மையினர் அதிமுகவுக்கு வாக்களித்தது இல்லை, சிறுபான்மையினர் வாக்கு எப்போதும் திமுகவுக்குதான் என்றும், அந்த வாக்கை குறிவைத்து பாஜகவை பிரிந்ததுதான் இந்த படுதோல்விக்கு காரணம் என்று அதிமுக தொண்டர்களை பேசி வருகின்றனர்.

இதேபோல் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இப்படி இருக்க இரண்டு கட்சிகளும் ஒன்றாக கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிமுக இனியும் சிறுபான்மையினர் வாக்குகளை நம்பி பலன் இல்லை, அந்த வாக்குகளுக்காக பாஜகவை பிரிவது எந்த விதத்திலும் அதிமுகவுக்கு பலனளிக்காது என்று அதிமுக தொண்டர்களை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்தும், இனிவரும் தேர்தலில் அதிமுக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அதிமுக சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பி இனி பயனில்லை என விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசியிருப்பதாவது:- 

இனியும் சிறுபான்மையினர் அதிமுகவை நோக்கி வருவார்கள் என்று எவருக்கும் நம்பிக்கையில்லை. இனி சிறுபான்மையினர் வாக்கு அரசியல் எடுபடாது, இனிஅதிமுகவே இந்துக்களின் வாக்குகளை நம்பித்தான் அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது, இந்துக்களின் வாக்குகளுக்கு ஏற்ப அரசியல் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அதிமக தள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் வினோதமான ஒரு சூழ்நிலை தான், அண்ணா திமுக மட்டுமல்ல இனி திமுகவும் இந்துக்களின் வாக்குகளை பெற்று தான் ஆட்சியை தொடர முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. பதவியேற்றவுடன் ஸ்டாலின் கூறுகிறார், எங்களை இந்துக்களுக்கு எதிரான கட்சி என கூறினார்கள், ஆனால் நாங்கள் இந்துக்களுக்கு செய்துள்ள நன்மைகளை பாருங்கள் என பட்டியலிடுகிறார். திமுக இந்துக்களுக்கு எதிரானது அல்ல என முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி இந்து உணர்வுகளை யாரும் காயப்படுத்த வேண்டாம் என அமைச்சர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார். இப்போது முன்பைவிட இந்து விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிற காரணத்தினால் திமுக அதில் மிகக் கவனமாக இருந்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரையில் தேசிய நலனை விரும்புகிற ஒரு அரசியல் பெருந் திரளை உருவாக்கவே முயற்சிக்கிறோமே தவிர, வாக்கு வங்கி அரசியல் செய்ய விரும்பவில்லை. பாஜக இப்போது இருக்கிற அதிமுக தலைவர்களுக்கு ஒரு மனக் குழப்பம் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் சரி செய்து, பாஜகவுடன் சேர்ந்து வெற்றியை சந்திக்க வேண்டுமா? இல்லை தனித்து நின்று சந்திக்க வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.