மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்ப்பதற்காக டெல்லி சென்ற துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அவரை சந்திக்க முடியாமல் மீண்டும்  சென்னை வந்தபோது, செய்தியாளர்களிடம்  எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என விரக்தியாக கூறிவிட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக துணை முதல்அமைச்சர் ஓபிஎஸ்  தனது ஆதரவாளர்களான  கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் பலருடன் டெல்லிச் சென்றார்.  இன்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

ஓபிஎஸ் டெல்லி பயணம்  குறித்து சென்னையில் பேட்டி அளித்த  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி,   தனது சகோதரர் சிகிச்சைக்காக தனி விமானம் கொடுத்து உதவியதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரானனுக்கு  நன்றி தெரிவிக்கவே டெல்லி சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே  டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய ஓபிஎஸ்ம் ,  இது அரசியல் பயணம் இல்லை  என்றும் தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன் என குறிப்பிட்டார்.

ஆனால்  டெல்லியில்  நடந்ததோ வேறு மாதிரி அமைந்துவிட்டது. அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , அதிமுக எம்.பி. மைத்ரேயனை மட்டும் சந்திக்கவே இன்று நேரம் ஒதுக்கி உள்ளார் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை ,  நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை எனவும் அவரது  அலுவலகம் தகவல் வெளியிட்டது.

அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,  ஓ பன்னீர் செல்வத்தை  மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களிலும்  வேகமாக செய்தி பரவியது. கடைசி வரை நிர்மலா சீத்தாராமன் ஓபிஎஸ்ஐ சந்திக்கவே இல்லை.

ஏற்கனவே அப்பாயிண்ட்மென்ட் வாங்காமல் ஓபிஎஸ் டெல்லி சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும், அவரை டெல்லி வரவைத்து பாஜக ஏமாற்றி அனுப்பிவிட்டது அல்லது இதில் ஏதோ உள்குத்து நடந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய துணை முதல் அமைச்சர்  ஓபிஎஸ்சிடம்,  நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த ஓபிஎஸ்  “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என ஒற்றை வரியில் விரக்தியாக கூறிவிட்டு வெளியேறினார்.

ஓபிஎஸ் எதற்காக டெல்லி சென்றார் ? நிர்மலா சீத்தாராமன் ஏன் ஓபிஎஸ்ஐ சந்திக்கவில்லை? மைத்ரேயனை மட்டும் ஏன் சந்தித்தார் ? ஓபிஎஸ் ஏமாற்றப்பட்டாரா ? என்பதெல்லாம் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.