திமுக ஒரு தொண்டர் தலைவராகவோ, முதல்வராகவோ ஆக முடியுமா? என துணை முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தேனியில் அதிமுக சார்பில் பிரமாண்ட பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 71 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஞாயிற்றுக்கிழமை 71 ஜோடிகளுக்கு திருமணம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

 

இவ்விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், தமது பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா கவனித்து வருகிறார். அதிமுக தவிர எந்த இயக்கத்திலும் தொண்டர் ஒருவர் முதலமைச்சராகி விட முடியாது. திமுகவில் ஒரு தொண்டர் தலைவராகவோ, முதல்வராகவோ ஆக முடியுமா? என கேள்வி எழுப்பினார். 

அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக விடமாட்டேன் என்று கூறிய வைகோ, இன்று ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் தூங்கமாட்டேன் என்று கூறுகிறார். இனி அவர் வாழ்நாள் முழுவதும் அவர் தூங்கவே மாட்டார். திமுக - காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் செய்தார்.

கடந்த 8 ஆண்டுகளாகவே தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதிமுக என்றுமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத்தான் இருக்கும் என்றும், அது அதிமுகவின் உயிர்பிடிப்பான கொள்கை என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.