கோடநாடு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்து முடிந்து 2 ஆண்டுக்குப் பிறகு பொய்யான ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுகிறது. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. 

தமிழக முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. கோடநாடு விவகாரத்தில் நியாயம் எங்கள் பக்கம் உள்ளது. கோடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி வருவதால், யாரிடமாவது ஆதாரம் இருந்தால் உடனே போலீசிடம் கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தல் கூட்டணி குறித்து ஊடகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் உடனடியாக கூட்டணி பேச்சு நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். மேலும் கூட்டணி அமைப்பதற்கு பழைய நண்பர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பது பற்றி கேட்டபோது, தேர்தல் வருகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் பதிலளித்தார். மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வர் வர அதிக வாய்ப்புள்ளதாக ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.