ஏழை எளிய மக்களின் எஃகு கோட்டை அதிமுக எனவும், தற்போது நடைபெறும் ஆட்சியில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வண்டலூர் கிளாம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. 

இதில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஒ.எஸ் மணியன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

முன்னதாக எம்.ஜி.ஆர் சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். 

அப்போது பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஏழை எளிய மக்களின் எஃகு கோட்டை அதிமுக எனவும், தற்போது நடைபெறும் ஆட்சியில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா மட்டுமே எனவும் அந்த வகையில் ஜெவின் ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார். 

மத வேறுபாடுகளை கடந்து அனைவரையும் அரவணைக்கும் ஆட்சிதான் நடக்கிறது எனவும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் நல்ல ஆட்சி தொடரும் எனவும் தெரிவித்தார்.