Delta District Leaders lament on Minister Kamaraj has never been loyal to anyone
தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டத்தின் அரசியல் மிகவும் வித்தியாசமானது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தொகுதிக்கு தெற்கே முக்குலத்தோரும், வடக்கே வன்னியர்களும், திருவாரூர், நாகை பகுதிகளில் தலித் சமூகத்தினரும் சற்றேறக்குறைய பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
ஆனால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அமைச்சர் பதவி என்பது முக்குலத்தோருக்கு மட்டுமே வழங்கப்படும். அதுவும், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகமான பின்னர், முக்குலத்தோரின் முக்கியத்துவம் இன்னும் அதிகமானது.
இந்நிலையில், தொடர்ந்து தனி தொகுதியாக இருந்து வந்த நன்னிலம் தொகுதி கடந்த 2011 தேர்தலின் போது, பொது தொகுதியானது. அதில் சசிகலா குடும்பத்திற்கு வேண்டியவர் என்பதற்காக நன்னிலத்தில், காமராஜுக்கு சீட்டு கொடுத்து, வெற்றி பெற்றதும் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

ஆனால், அவர் சசிகலா குடும்பத்தினருக்கு பெரிய அளவில் விசுவாசமாக இல்லை. எனினும், கடந்த தேர்தலில், சசிகலா குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி காமராஜுக்கு சீட்டு வழங்கி அவரை அமைச்சராகவும் ஆக்கினார் ஜெயலலிதா.
அதே சமயம், மன்னார்குடி தொகுதியில், சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான காமராஜ் என்ற மற்றொருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
ஒரு வேளை, மன்னார்குடி காமராஜ் ஜெயித்து விட்டால், தமக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்று பயந்த நன்னிலம் காமராஜ், தமது ஆதரவாளர்கள் சிலரை பயன்படுத்தி, அவரை தோற்கடித்து விட்டார்.
இதனால், அவர் மீது சசிகலா குடும்பத்தினர் மிகவும் ஆத்திரத்தில் இருந்தாலும்,வெளியில் காட்டி கொள்ளாமல் இருந்தனர்.
இருந்தாலும், சசிகலா குடும்பத்தின் பெயரை சொல்லி, தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் தொகுதியில் மூன்றுமுறை தொடர்ந்து வெற்றி பெற்று, வேளாண்துறை அமைச்சராக இருக்கும், வன்னியர் சமூகத்தை சேர்ந்த துரைக்கண்ணுவை, சுதந்திரமாக செயல்பட விடாமல் இடையூறு கொடுத்து வந்தார் காமராஜ்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவை அடுத்து, யாரையும் பகைத்து கொள்ளாமல் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலா, அமைச்சர் துரைக்கண்ணுவை சமாதானம் செய்தார். அத்துடன், அமைச்சர் காமராஜையும் தன்னுடன் சேர்த்து கொண்டார்.
தற்போது, வேறு வழி இல்லாமல் அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டிய நிலையில் இருந்த காமராஜுக்கு, ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவர், தொடுத்த வழக்கின் மூலம், உச்சநீதி மன்றம் வழியாக சிக்கல் வந்து சேர்ந்துள்ளது.
30 லட்ச ரூபாய் பண மோசடி புகாரில், அமைச்சர் காமராஜ் மீது, மன்னார்குடி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டிய வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவருக்கு நெருக்கடி அதிகமாகி, அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது.
அமைச்சர் காமராஜ், தமது சாதி உணர்வை தமது வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி கொண்டார். அவரது சமூகத்தை சேர்ந்த ஒருவர், அதே மாவட்டத்தில் உயர்ந்து விட கூடாது என்பதற்காக, மன்னார்குடி காமராஜை தோற்கடித்து, சசிகலா குடும்பத்தின் கோபத்திற்கு ஆளானார்.
வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவை சுதந்திரமாக செயல்பட விடாமல் இடையூறு கொடுத்து வந்தார்.
அமைச்சர் காமராஜை பொறுத்தவரை, கட்சிக்கும் விசுவாசமாக இல்லை. அமைச்சர் பதவி பெற்று தந்த சசிகலா குடும்பத்திற்கும் விசுவாசமாக இல்லை. மொத்தத்தில் அவர் யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை என்று கூறுகின்றனர் டெல்டா மாவட்ட அதிமுகவினர்.
