நடிகர் ரஜினி வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் இருந்து ஒரு சிலர் வந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்ற பிறகு தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பானது. இதுநாள் வரை ரஜினி அரசியல் பேசி வந்தால் மோடி – அமித் ஷாவை பாராட்டி ரஜினி பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றது. மேலும் அதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு பிறகு ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும் கூட மோடி – அமித் ஷாவை பாராட்டியது குறித்து விளக்கம் அளித்தார்.

அத்தோடு அரசியல் கட்சி எப்போது ஆரம்பம் ஆகும் என்பது குறித்து தெரிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்திருந்தார். இதனால் அவர் அரசியல் வருகை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் ரஜினி அடுத்த ஆண்டு சித்திரையில் அரசியல் கட்சி துவங்குவது உறுதி என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் ரஜினியின் நண்பர் கராத்தே தியாகராஜன் கூட அடுத்த ஆண்டு ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி வீட்டிற்கு கடந்த  2 நாட்களாக வட இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் சிலர் வந்து செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பார்க்க சினிமா ஆட்கள் போல் இல்லை என்றும் அரசு அதிகாரிகள் போல் இருக்கிறார்கள் என்றும் கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகிகள் போல் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இது குறித்து விசாரித்த போது ரஜினி வீட்டுக்கு வந்து சென்றவர்கள் இமேஜ் மேனேஜ்மென்ட் என்று சொல்லப்படக்கூடிய பிரபலங்களை மேலும் பிரபலமாக்கும் விளம்பர கம்பெனி ஆட்கள் என்று சொல்லப்படுகிறது.

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது இப்படிப்பட்ட நபர்களைத்தான் தனக்காக வேலைக்கு அமர்த்தினார். இதன் மூலமாக இந்தியா முழுவதும் மோடி பிரபலப்படுத்தப்பட்டார். ஆனால் ரஜினிக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை. தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ரஜினி பிரபலம். அப்படி இருக்கையில் விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு ரஜினி வீட்டில் என்ன வேலை என்று கேள்வி எழுந்தது. அரசியல்வாதியாகிவிட்டால் எப்படி பேச வேண்டும், செய்தியாளர்களை எப்படி அணுக வேண்டும், என்ன மாதிரியான உடை அணிய வேண்டும் என்பது போன்ற டிப்ஸ்களை கொடுப்பது அவர்களின் பிரதான பணி என்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை இப்படி ஸ்டாலின், கமல் மற்றும் எஸ்பி வேலுமணி போன்றோர் இமேஜ் மேனேஜ்மென்ட் கம்பெனிகளுடன் கான்ட்ராக் வைத்துள்ளனர். அந்த வரிசையில் ரஜினியை ஒரு சில நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சந்தித்துவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இது அத்தனையும் லதாவின் ஏற்பாடு என்றும் இதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ இமேஜ் மேனேஜ்மென்ட் என்கிற அளவுக்கு வந்துவிட்டார் என்றால் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி என்கிறார்கள்.