டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் 7,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,03,084 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் தொடர்பாக டெல்லி அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்;- தற்போது மக்களுக்கு கடினமான நேரமாக உள்ளது. இது, அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. அரசியல் மற்றும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சிறிது காலம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.  சாத் பூஜை பண்டியை மக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார். பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.