மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரை மீறி செயல்படக்கூடாது என்று ராகுல் காந்தி கொடுத்த செம டோசை தொடர்ந்து திருநாவுக்கரசரிடம் நடிகை குஷ்பு சரண்டர் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக அதிரடியாக பேட்டி அளித்தார் குஷ்பு. தற்போதைய தலைவர் திறமை வாய்ந்தவராக இல்லை என்றும், போராட்டம் நடத்தாமல் அமைதியாக இருப்பதாகவும் குஷ்பு தெரிவித்திருந்தார். மேலும் விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் குஷ்பு கூறியிருந்தார்.

இந்த பேட்டியால் கோபம் அடைந்த திருநாவுக்கரசர் குஷ்புவை பைத்தியம் என்று சாடியிருந்தார். மேலும் தன்னை விரைவில் மாற்றப்போவதாக கூறும் குஷ்பு என்ன காங்கிரஸ் கட்சிக்கு தலைவரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். திருநாவுக்கரசருடனான மோதலை தொடர்ந்து காங்கிரஸ் தொடர்பான எந்தநிகழ்ச்சிக்கும் குஷ்புவை யாரும் அழைப்பதில்லை. இதனால் வெளிநாட்டிற்கு சென்ற குஷ்பு சுமார் ஒரு மாதம் வரை அங்கு தங்கியிருந்துவிட்டு சென்னை திரும்பினார். இருந்தாலும் கூட காங்கிரஸ் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் குஷ்பு பங்கேற்கவில்லை. தேசிய அளவிலான நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் டெல்லியில் நீண்ட முயற்சிக்கு பிறகு குஷ்புவை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்து குஷ்பு அளித்த பேட்டி தொடர்பாக ராகுல் விளக்கம் கோரியுள்ளார்.

அதற்கு குஷ்பு பதில் அளிக்க முயற்சித்த போது, தலைவர் மீது ஏதேனும் புகார் இருந்தால் அதனை மேலிட பொறுப்பாளர் முகுல் வாஷ்னிக்கிடம் தெரிவிக்க வேண்டும், இல்லை என்றால் திருநாவுக்கரசரையே நேரில் சந்தித்து முறையிட வேண்டும், மாறாக செய்தியாளர்களை சந்தித்து பேசுவதை ஏற்க முடியாது என்று ராகுல் செம டோஸ் கொடுத்துள்ளார். உடனடியாக திருநாவுக்கரசரை சந்தித்து வருத்தம் தெரிவிக்குமாறும் ராகுல் குஷ்புவிடம் கூறியுள்ளார்.

 

 இதனால் மிரண்டு போன குஷ்பு சென்னை திரும்பி திருநாவுக்கரசரை சந்திக்க முயற்சித்து வந்தார். ஆனால் திருநாவுக்கரசர் பிடி கொடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த குஷ்பு திருநாவுக்கரசரை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் அது போல் நடந்து கொள்ளமாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து பெருந்தன்மையுடன் குஷ்புவின் வருத்தத்தை ஏற்றுக் கொண்ட திருநாவுக்கரசர் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கும் போது குஷ்புவை அருகில் அழைத்து நிற்க வைத்துக் கொண்டார். ஆனால் குஷ்பு தான் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.