பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்த, ஹிந்து, சீக்கியர், பார்சி, கிறிஸ்துவர் போன்ற சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, ஜாமியா பல்கலைக்கழக  மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த போலீசார் மாணவர்கள் மீது தாக்கதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் வலுப் பெற்றது. பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நாள்தோறும்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் பல பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் டெல்லியின் சீலாம்பூர், இந்தியா கேட், தாரியாகஞ்ச், ஜப்ராபாத் ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று மாலையில் தாரியாகஞ்ச், சீலாம்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். இதில் ஏராளமான கார்கள் தீக்கிரையாயின. தாரியாகஞ்ச் பகுதி போர்க்களமானது. இந்த வன்முறையில் நடந்த கல்வீச்சில் 4 போலீசார் காயமடைந்தனர். போராட்டக்காரர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

இந்தியா கேட் பகுதியை நோக்கி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை. மாணவர்கள் கையில் ரோஜாப்பூவை ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது கண்ணில் பட்ட போலீசாரிடம் ரோஜாபூவை வழங்கி காந்தி வழியில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியான சீலாம்பூரில் குவிந்த போராட்டக்கார்கள் லோஹோபவுல் என்ற இடத்தில் ஒன்றாக கூடி கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து சென்ட்ரல் பார்க், ஜூமா மஸ்ஜித் ஆகிய பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. இப்பகுதிகள் அனைத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் காணப்படுகிறது.