delhi police arrived in chennai

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்டமாக சென்னையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து டிடிவி.தினகரனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

சென்னை அடையாறில் உள்ள டிடிவி.தினகரன் வீடு மற்றும் அலுவலகங்கள் சோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவரது நெருங்கிய நண்பர்கள், தொழில் நண்பர்கள், அரசியல் பிரமுகர்களிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், இன்று காலை விமானம் மூலம் டிடிவி.தினகரன் சென்னை வருவதை அறிந்ததும் பெங்களூர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால், அங்கு அவரை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து அவரை பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.