தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு டெல்லியில் நாளை இரவு நட்சத்திர விடுதியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து இன்று இரவு ஓபிஎஸ்-ம், நாளை காலை முதல்வர் ஈபிஎஸ் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். 

இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, மே 19-ம் தேதி வரை நடைபெற்ற தேர்தல், மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது. எனினும் தமிழகத்தில் பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பா.ஜ.க. தலைமையிலான கட்சிகளுக்கு அமித்ஷா இந்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு வந்ததை தொடர்ந்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். இந்நிலையில் எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு முன்பாகவே இன்று இரவு ஓபிஎஸ் டெல்லி விரைகிறார். அப்போது தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பாஜக தலைவர்களிடம் ஓபிஎஸ் வலியுறுத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.