delhi health minister admitted in hospital

டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 3 மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமை செயலாளரை ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவித ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என டெல்லி முதல்வரும் அமைச்சர்களும் குற்றம்சாட்டுகின்றனர். 

இதனால் மக்கள் பணி பாதிக்கப்படுவதால், ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல், துணைநிலை ஆளுநர் பைஜால், அவர்களை தூண்டிவிடுவதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டுகிறார். மேலும் மத்திய பாஜக அரசும் அவரகளை தூண்டிவிடுவதாக கேஜ்ரிவால் குற்றம்சாட்டுகிறார். 

எனவே ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முடித்து வைக்க வலியுறுத்தி டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கேஜ்ரிவால் கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதத்திற்கு மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக உண்ணாவிரதமும் இருந்துவருகின்றனர். 

உண்ணாவிரதத்தால் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை சற்று மோசமானது. இதையடுத்து அவர் நேற்றிரவு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.