delhi crime police should file charge sheet in dinakaran bribe case
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கே ஒதுக்க வேண்டும் என தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பு கோரியதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அப்போது, இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரனை கைது செய்தனர். ஆனால் தினகரன் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்றை கைப்பற்றிய போலீசார், அந்த செல்போன் பதிவில் உள்ளது தினகரனின் குரல்தானா என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். குரல் பரிசோதனைக்கு தினகரன் ஒத்துழைப்பு அளிக்காததால், தனியார் தொலைக்காட்சிகளில் தினகரன் அளித்த பிரத்யேக பேட்டி பதிவைப் பெற்று பரிசோதித்தனர்.
அப்போது, போலீசாருக்கு கிடைத்த செல்போன் ஆடியோ பதிவு ஆதாரத்தில் இருப்பது தினகரனின் குரல்தான் என டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுகேஷின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதிவரை நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் உறவினர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதானை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தினகரனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
