எம்.எல்.ஏக்களை டிடிவி தரப்பு மூளை சலவை செய்து வருவதாகவும் டிடிவி தினகரன் பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் இல்லையென்றாலும் ஒருநாள் நிச்சயம் திரும்பி வருவார்கள் எனவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் அதிமுக ஆட்சி கவிழும் என்று டி.டி.வி.தினகரன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் ஆருடம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இன்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தினகரனுக்கு மலர்கொத்து வழங்கி தன்னை அவருடன் இணைத்துக் கொண்டார்.

இதைத் தொடந்து  செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, டி.டி.வி.தினகரனுக்குத்தான் மக்கள் செல்வாக்கு இருப்பதாக  தெரிவித்தார். எனவே அவருடன் இணைந்து செயல்படப் போவதாகவும் கூறிய அவர், தொகுதி மக்களுக்கு பணியாற்ற நினைக்கும் போதெல்லாம் அமைச்சர் அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருவதாக குற்றம்சாட்டினார். .

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், எம்.எல்.ஏக்களை டிடிவி தரப்பு மூளை சலவை செய்து வருவதாகவும் டிடிவி தினகரன் பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் இல்லையென்றாலும் ஒருநாள் நிச்சயம் திரும்பி வருவார்கள் எனவும் தெரிவித்தார்.