தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2019-2020 ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயீஸ் பெடரேஷன் வலியுறுத்தி உள்ளது. இல்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன்பே போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதற்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை  நடத்துவதும் இதுவரையில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இவ்வாண்டு போனஸ் வழங்குவது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும்  நடத்திட மின்சார வாரியம் தொழிற்சங்கங்களை அழைக்கவில்லை. 

இதுதொடர்பாக கடந்த 8-10- 2020இல் மின்சார வாரியத்திற்கு கடிதம் கொடுத்தும் இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்நிலையில் மின்சார வாரியத்தை கண்டித்து TNEB எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு 20-10-2020 மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 7-10-2020 அன்று இணையவழியில் தொழிற் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் அரசுக்கு முன் வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது அது பின்வருமாறு: 

8-10- 2020இல் போனஸ் பேச்சுவார்த்தை நடத்த கோரி வாரியத்திற்கு கடிதம் கொடுத்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை, எனவே உடனடியாக போனஸ் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கும் பகுதிநேர பணியாளர்களுக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். class 1 class 2 அலுவலர்களுக்கு கருணைத் தொகை ரூபாய் 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஊதியம் ரூபாய் 380 வழங்குவதின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கிட வேண்டும். மின் வினியோக உற்பத்தி பொது நிர்வாண வட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ரூபாய் 380 தின ஊதிய அடிப்படையில் பணியில் அமர்ந்திட வேண்டும். பகுதி நேர பணியாளர்கள் அனுமதிக்காத பிரிவு அலுவலகங்களுக்கு உடன் அனுமதித்தல் வேண்டும்.

தீபாவளிப் பண்டிகைக்கு 15 நாட்கள் முன்னதாகவே போனஸ் வழங்கிட வேண்டும்.  தீபாவளி பண்டிகை எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி உள்ளதால் விரைந்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டுகிறோம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.