Deepas life threatened by Madhav The rise of oil king Rajapakse Pepperpet statements.

அதிரடி சரவெடியான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஒரே ஆறுதல் ‘தீபா அண்ட்கோ’வின் கலகல கரகாட்டமே! ’ஏய் நல்லா பார்த்துக்கா நானும் அரசியல்வாதிதான், நானும் அரசியல்வாதிதான்!’ என்று உதார் விட்டபடி தீபா செய்யும் ஒவ்வொரு காரியமும் பார்ப்பவர்களை பல் வலிக்க சிரிக்க வைக்கிறது.

கோக்குமாக்குத்தனமாக பாலிடிக்ஸ் செய்யும் தீபாவின் கூடாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பே அவரது ஆருயிர் நண்பர் ஆயில் ராஜாவின் ரீ எண்ட்ரியும், அதனால் தீபாவின் கணவர் மாதவனின் மண்டை காய்ச்சலும்தான்.

ஆயில் ராஜா தீபா பேரவையிலிருந்து நீக்கப்பட்டதும் மாதுக்குட்டிக்கு சந்தோஷம் தலைபிடிபடவில்லை, சதாசர்வ காலமும் தீபாவின் முந்தானையை பிடித்தபடி குஷியாக வலம் வந்தபடி இருந்தார்.

தீபும், மாதுவும் புது மணமக்கள் அலங்காரத்தில் உறவினர்களை சந்தித்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலான போது ஆயில் ராஜாவுக்கு அகில உலகமும் பற்றி எரிவது போல் இருந்தது. ஆயிலை கடுப்பேற்ற மாதுவே அந்த போட்டோக்களை வாட்ஸ் அப் குரூப்புகளில் படரவிட்டது தனிக்கதை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆயில் ராஜாவை மீண்டும் கட்சிக்குள் இணைத்திருக்கிறார் தீபா. அதுமட்டுமில்லாமல் ‘தலைமை நிலைய மாநில செயலாளர்’ என்கிற பதவியும் வழங்கியிருக்கிறார். இந்த பதவியின் அந்தஸ்து என்ன? என்று தீபா பேரவை பக்கம் விசாரித்த வகையில் அது பி.ஜே.பி.யில் அமித்ஷாவும், காங்கிரஸில் சோனியாவும் வைத்திருக்கும் பதவிக்கு இணையானது என தகவல் வருவது தனிக்கதை.

இந்நிலையில் கட்சிக்குள் திரும்பி வந்திருக்கும் ராஜா “தீபாவின் சொத்துக்களை பறிப்பதற்கு எந்த அளவுக்கு இறங்க தயங்காதவர் மாதவன். அவரதால் தன் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்று தீபா நினைக்கிறார். அதனால்தான் என்னை மீண்டும் பேரவைக்குள் இணைத்திருக்கிறார்.

பொய்யான தகவல்களை சொல்லி தீபாவை திருமணம் செய்திருக்கும் மாதவனிடமிருந்து தீபாவின் உயிரை காப்பாற்றுவதே எனக்கு பெரிய கடமையாக இருக்கிறது.” என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளதால் தாறுமாறாக நொந்து கிடக்கிறார் மாதவன்.

ஆனால் இந்த கூத்துக்களையெல்லாம் ஒரக்கண்ணில் ரசித்தவாறே இளைய புரட்சித்தலைவிக்கு அடுத்து தனக்குத் தானே வேறென்ன பட்டம் சூட்டிக் கொள்ளலாம் என்பது பற்றி தீயாக யோசிக்க துவங்கியுள்ளார் தீபா.