ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.
அவருக்கு  12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம், அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று மாலை அறிவித்தார். 

இதனையடுத்து போயஸ் கார்டன் வீடு தங்களின் குடும்ப சொத்து என  ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா நேற்று கூறி இருந்தார். 

வேதா இல்லம் தங்களுக்கு தான் சொந்தம் எனவும், அதை நினைவிடமாக மாற்றக் கூடாது எனவும் ஜெ., அண்ணன் மகன் தீபக், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் , ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலின் படி அந்த வீடு வாரிசுகளான எங்களுக்கே உரியது. எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம்.

நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வருக்கு தீபக் எழுதியுள்ள கடிதத்தில் தேதி மாறி மாறி உள்ளதால் குளறுபடி ஆகியுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதியில் கடிதம் எழுதப்பட்டு பின் ஆகஸ்ட் 16ம் தேதி என்று மாற்றப்பட்டு உள்ளது.

வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தான் முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவிப்புக்கு முன்பே தீபக் கடிதம் எழுதி உள்ளாரா என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.