முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகன் தீபக், வெளியே கொண்டு வரப்பட்டார். சசிகலாவின் ஆதரவில் உள்ள அவர், அதிமுக துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்றுள்ளதை யாரும் விரும்பவில்லை என கூறினார்.

இதனால், அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை, யரோ பின்னால் இருந்து இயக்குவதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு, தீபக் அளித்த பேட்டி வருமாறு:-

எனது அத்தைக்கு பிறகு, சசிகலா தான் இருக்கிறார். அவர், எனக்கு அம்மாவை போல் இருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் யாரும் செயல்பட மாட்டார்கள். அதே நேரத்தில் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் செயல்படுவதை தொண்டர்களும், பொது மக்களும் ஏற்று கொள்வார்கள்.‘

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர் 3 முறை முதல்வராக இருந்தார். அப்போது, கட்சியையும் ஆட்சியையும் நன்றாக வழி நடத்தினார். ஆனால், அந்த திறமை டி.டி.வி.தினகரனுக்கு இல்லை.

இப்போது ஓ.பி.எஸ். தனியாக சென்றுள்ளார். அவர் மனது சரியில்லை. அதனால், சென்றுவிட்டார். அவர் மீண்டும் வருவார். அவர் யாருடனும் சண்டை போடவில்லை. அப்படி போட்டாலும், வெளியாட்களிடம் சண்டை போடவில்லை. இதுகுடும்ப சண்டை.

சசிகலாவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம். அதுவும் சரியாகிவிடும். அதிமுகவில் தலைமையேற்பது சசிகலாவாக இருந்தாலும், பரவாயில்லை. ஆனால், டி.டி.வி.தினகரன் தலைமை வேண்டாம். இது குடும்ப அரசியலாக மாறிவிடுகிறது.

சசிகலா என் அம்மாவை போன்றவர். அவருக்கு நான் எப்போதும் ஆதரவு தருவேன். அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வேண்டாம் என வெறுத்தாலும், அவர் தேர்தலில் போட்டியிட்டால், என்னுடைய ஓட்டு சசிகலாவுக்கு உண்டு. யார் போடாவிட்டாலும், என்னுடைய ஓட்டு சசிகலாவுக்கு உண்டு.

குடும்ப அரசியலாக்கி, அதிமுக உருவாக இருக்கிறது. அதிமுக குடும்ப அரசியலாக கூடாது. இதில், எந்த குடும்பமும் வரக்கூடாது. அதிமுகவை உடைய விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.