மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த வீடு, சசிகலா குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தீபா தரப்பில் புகார் கூறப்பட்டிருந்தது.

போயஸ்கார்டன் வீடு தனக்கும், சகோதரர் தீபக்குக்கும்தான் சொந்தம் என்று தீபா கூறி வந்தார். ஆனாலும், போயஸ் கார்டன் வீட்டுக்குள் தீபாவால் நுழைய முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, தீபக் அழைத்ததால், போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார் தீபா. அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் செய்தியாளர்கள் உட்பட சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் அமைதியானது.

இந்த நிலையில், போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீபா இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையில் அவரின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோருக்கு கிடைக்க வேண்டும் என்று தீபா அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லராஜாமணி கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்த உயில் விவகாரம் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போதுவரை, ஜெயலலிதாவின் சொத்துக்களின் கட்டுப்பாடு இன்னமும் சசிகலா குடும்பத்தாரிடமே உள்ளது என்றார். 

அவர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க முதற்கட்டமாக போயஸ்கார்டன் வீட்டை நீதிமன்றத்தின் மூலம் பெற தீபா முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் வழக்கறிஞர் செல்லராஜாமணி தெரிவித்தார். தீபாவின் இந்த முடிவுக்கு எதிர்தரப்பினர் தடை ஏற்படுத்த ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.