ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டாலும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சசிகலாவின் உறவினர்கள் என்னை கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதத்தைப் பெற்றனர் என ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்தியதையடுத்து, அரசியல் களம் சூடு பிடித்தது.

சசிகலா ஓர் அணியாகவும் ஓபிஎஸ் ஓர் அணியாகவும் பிரிந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஜெயலலிதா மறைந்தததில் இருந்தே அரசியல் செய்து வரும் அவரது அண்ணன் மகள் தீபா,ஒரு புறம் கட்சியையும், ஆட்சியையும் எப்படியாவது பிடித்து விடலாம் என காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய தீபா, உங்களது கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுப்பேன் என தெரிவித்தார்.

ஏற்கனவே ஜெயலலிதா பிறந்த நாளான இம்மாதம் 24 ஆம் தேதி, அரசியலில் முழுமையாக ஈடுபடுவது குறித்து அறிவிப்பேன் என தீபா கூறியிருந்தார். அ அதனடிப்படையில், ஏராளமான தொண்டர்கள் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் கரூர் கண்ணன், பவானி பி.ஜி.நாராயணன், நிலக்கோட்டை ராமசாமி மற்றும் சேலம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வந்து ஜெ.தீபாவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆதரவாளர்கள் அளித்துள்ள அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவை பரிசீலனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் முடிவை மேற்கொள்ள எள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.

தனது நிலைப்பாடு குறித்து வரும் 24 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்த தீபா, தற்போதைய சூழ்நிலையில் ஓபிஎஸ் க்கு ஆதரவு அளிப்பதா? தனிக்கட்சி தொடங்குவதா? என்பது ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.