வேலூர் மாவட்ட ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பேரவை நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பெருமாள், கோடீஸ்வரன், அன்பு ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக ராமச்சந்திரன் கலந்து கொண்டு, பேசினார்.

அதில், தீபா பேரவையில் யாருக்கும் இதுவரை பொறுப்புகள் வழங்கவில்லை. தீபாவின் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என மதுரை, கரூர், தேனி, நாமக்கல், சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைப்பு பணி செய்து வருகிறோம்.

வேலூர் மாவட்டத்தில் தீபா பேரவையில் உறுப்பினராக சேருவதற்கு 1.38 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து குறைந்தது ஒரு கோடி உறுப்பினர்களுடன் சென்று, தீபாவை நேரில் சந்தித்து, தலைமை ஏற்கும்படி வலியுறுத்துவோம்.

இதை தடுக்க அதிமுகவினர் என்ன மிரட்டல் விடுத்தாலும், நாங்கள் அஞ்சமாட்டோம். பயப்படவும் மாட்டோம். தீபா காட்டாற்று வெள்ளம் கிடையாது. அவர் சுனாமியை போன்றவர். விரைவில், அனைத்து மாவட்டங்களுக்கும் தீபா சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

அப்போது, நமது வேலூர் மாவட்டத்துக்கும் வந்து, நம்மை சந்திப்பார். அப்போது, தீபா பேரவையின் பலத்தை அவருக்கு தெரிவித்து, நமக்கு தலைமையேற்க வேண்டும் என அழைப்பு விடுக்க வேண்டும் என பேசினார்.