புதிய கட்சி தொடங்க தொண்டர்கள் வலியுறுத்தல்….பொறுமையாக காத்திருக்கிறேன் தீபா அறிவிப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வை வழிநடத்திச் செல்வது யார் என்ற சர்ச்சை எழுந்தது. அக்கட்சியின் மூத்த அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜெவின் தோழி சசிகலாவையே முன்னிருத்தினர்.

அதன்படி கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் நேற்று தலைமை கழகத்திற்கு சென்று பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால் அதிமுகவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவே சசிகலாவை பொதுச் செயலாளராக கொண்டு வந்தார்கள் என்றும் மற்றபடி இதில் தொண்டர்களுக்கு விருப்பமில்லை என்றும் பரவலாக கருத்து உள்ளது.

அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என அடிமட்ட தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் எங்கும் பேனர்கள், வால் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஏராளமான தொண்டர்கள் தீபாவின் வீட்டிற்குச் சென்று அவரை  சந்தித்து அதிமுக வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொண்டர்கள் கருத்தைக் கேட்காமல் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்கு மாற்றாக தீபாவை மட்டுமே கொண்டுவர முடியிம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களுக்கு பதிலளித்த தீபா, பொறுமையாக காத்திருக்கிறேன் என்றும், விரைவில் சரியான முடிவு எடுப்பேன் என்றும் அவர்களிடம் உறுதி அளித்தார்.