’கட்சி ஆரம்பிப்பது நம் தேசத்தை பொறுத்தவரையில் செம சிம்பிள் காரியம்! இமெயில் ஐ.டி. ஓப்பன் பண்ணுவதுபோல் போகிற போக்கில் ஏதோ ஒரு முன்னேற்ற கழகத்தை துவக்கிவிடலாம்.” என்று 'NewsFast' சொன்ன ஈரம் காய்வதற்குள் ஒரு கட்சியை துவங்கிவிட்டார் நம்ம மாதவன். 

பன்னீர் பக்கம் பாய்வதா? சசி அணிக்கு சாய்வதா? தீபாக்கா வூட்டாண்ட குந்துவதா? என்று ஏக குழப்பத்தில் இருந்த அ.தி.மு.க.வின் கோடானு கோடி தொண்டர்களுக்கும் ஒரு புதிய விடியலாய் நம்ம மாதுக்குட்டியின் கட்சி அமையும், சிதறிக்கிடந்த அ.தி.மு.க.வின் வாக்குகளை இந்த புதிய இயக்கம் மீட்டெடுக்கும்!...என்றெல்லாம் ச்சும்மானிக்கு மரண கலாயாய் எழுதலாம் என்று நினைத்தாலும் கூட மாதுவின் ’ஏய் நல்லா பார்த்துக்க நானும் தலைவன் தான்டா!’ என்றபடி பாவமாய் பார்க்கும் அந்த  முகத்துக்காக விட்டுடலாம் பிரதர்ஸ்!

ஆனாலும் சில விஷயங்களை மாதுக்குட்டியிடம் கேட்டுத்தான் ஆக வேண்டும். கட்சி ஆரம்பிச்சோம், மீடியாக்காரனுங்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினோம், அப்புறம் ஆதரவு கொடுத்த அல்லாருக்கும் நன்றி!...அப்படின்னு சொல்லி எஸ்கேப் ஆகிட முடியாது.

நாலு காரை எடுத்துக்கினு காலையில பத்து மணிக்கு தெக்கேயும், வடக்கேயுமா வலம் வரணும். சாயங்காலம் ஆறு மணிக்கு கிழக்கேயும், மேக்கேயுமா சீறிக்கிணு போவணும். (ஆனா மாது உனக்கு வந்த சோதனைய பார்த்தியா! நீ கட்சி ஆரம்பிச்ச நேரமா பார்த்து காரோட கொண்டையில சிவப்பு சைரன வைக்க கூடாதுன்னு சொல்லிட்டானுவ, பொறாம பிடிச்ச பசங்க.

இல்லேன்னா உன் கார்ல டாப்புல ஒண்ணு, டிக்கியில ஒண்ணுன்னு ரெண்டு சைரனை மாட்டியிருக்கலாம். ப்ச்ச்ச்ச்!...)
அப்புறம் கட்சிக்கு தனி ஆபீஸு, பக்கத்து டீ கடையில அக்கவுண்டு, தினமும் நாலு டெய்லி பேப்பரு, எல்.சி.டி. டி.வின்னு வைக்கணும்.

இதைவிட முக்கியமா ஆபீஸுல தினமும் நாலு மினரல் வாட்டர் கேன் போடணும். அடிக்கிற வெயிலுக்கு தண்ணிய குடிச்சு காலி பண்றதுக்குன்னே சில பசங்க ஆபீஸாண்ட கெடப்பானுங்க. அவனுங்கள தொண்டனுங்கன்னு நினைச்சு நீ ஏமாந்துட கூடாது! கேன் வாட்டரை மட்டும் கேன்சல் பண்ணி பாரு, அப்பாலிக்கா ஒரு பய வரமாட்டான். 

இதையெல்லாம் விட ஒரு முக்கியமான மேட்டர் இருக்குது டியர் மாது! தினமும்  உன் கூட கூடி நிக்குற கூட்டத்துக்கு ராவுத்தர் கடையில பிரியாணி வாங்கிக் கொடுக்கணும். பீஸு இல்லாம குஸ்காவ மட்டும் வாங்கிக் கொடுத்தேன்னா, தொண்டனுக்க கோப்பரேட் பண்ண மாட்டாங்க! அப்பாலிக்கா ஆட்சிய புடிக்கிறது கஷ்டம்தான். இன்னிக்கே நீ சோறு வாங்கி கொடுக்கலேன்னு செம சவுண்டாமா!?
இப்ப சொல்லுங்க...மிஸ்டர் மாதவன், கட்சிக்கு பேரு வெச்சீங்களே, சோறு வெச்சீங்களா?