முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, அதிமுக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும், தீபாவை முன்னிறுத்தி கட்சியை தொடங்கவும், தொண்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தீபா ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தீபா பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், கூட்டம் நடத்துவதற்கு, மண்டபத்துக்கான முன்பணம் செலுத்தி இருந்தார்.

இதைதொடர்ந்து, நேற்று கோபிநாத் மற்றும் ஆதரவாளர்கள் திருமண மண்டபத்துக்கு வந்தனர். ஆனால் மண்டப உரிமையாளர், கூட்டம் நடத்த அனுமதி மறுத்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபா ஆதரவாளர்கள், திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு கோ‌ஷமிட்டனர்.

பின்னர் அவர்கள், திருமண மண்டபத்தின் வெளியே சாலையில் நின்று கூட்டத்தை நடத்தினார்கள். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீபா அரசியலுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து தீபா ஆதரவாளர்கள் கூறுகையில், தீபா அரசியலுக்கு வரவேண்டும் என நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், இதை விரும்பாத சிலர், எங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். தீபா பேரவை ஆலோசனை கூட்டம் நடத்த போகிறோம் என கூறி, திருமண மண்டபத்தை முன் பதிவு செய்தோம்.

ஆனால், திடீரென அந்த பணத்தை திருப்பி கொடுத்து, கூட்டம் நடத்த அனுமதியில்லை என கூறுகிறார்கள். இதற்கு அவர்களை குறை கூற முடியாது. யாரோ திருமண மண்டப உரிமையாளரை மிரட்டி இருக்கிறார்கள் என்றனர்.