deepa criticizing inspector audio going viral
டிடிவி.தினகரனுக்கு எதிராக அறிக்கை விட்டது தொடர்பாக மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை தீபா தொலைபேசியில் வாட்டி வதைத்துவிட்டார். இதுகுறித்த ஆடியோ தற்போது, வைரலாக பரவி வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தனித்தனியாக பல்வேறு அணிகள் உருவாகிவிட்டன. இதையொட்டி கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்களும், பரபரப்பும் தினமும் நடந்து வருகிறது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அரசியலில் குதித்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் நாளடைவில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் தொண்டர்கள் கூட்டம் விலகியது.

ஆனாலும் அவர், அரசியலில் தன்னைநிலை நிறுத்திக் கொள்ள அதிமுகவின் அனைத்து அணிகள் மீதும் சகட்டு மேனிக்கு தன் அறிக்கை விடுத்து வருகிறார்.
குறிப்பாக சிறையில் இருந்து வெளிவந்துள்ள டிடிவி.தினகரன், கட்சி பணியாற்றுவேன், அதிமுகவை நாங்கள் இயக்குவோம் என கூறினார். அதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த தீபா, கண்டன அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் டிடிவி.தினகரன் குறித்து தீபா வெளியிட்ட அறிக்கை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், தீபாவுக்கும் இடையே தொலைபேசியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தீபா அலுவலக தொலைபேசிக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் ஒருவர், டிடிவி.தினகரன் குறித்து தீபா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது உண்மை தானா. ஏன் இதுபோன்று அறிக்கை வெளியிடுகிறார் தீபா.
அந்த அறிக்கையை எனக்கு உடனே அனுப்புங்கள் என கேட்டுள்ளார். மேலும், நான் தீபா மேடத்திடம் பேச வேண்டும் என்று கேட்டு அடிக்கடி போன் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டரிடம் தீபா போனில் பேசியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது.
தொலைபேசியில் தீபா-போலீஸ் அதிகாரி இடையே நடந்த வாக்குவாதம் வருமாறு:-
தீபா: ஹலோ சொல்லுங்க சார், என்ன கேட்கணும்.
இன்ஸ்பெக்டர்: அறிக்கை சம்மந்தமாக கேட்டேன்.
தீபா: அதை எதுக்கு நீங்க கேக்குறீங்க.
இன்ஸ்பெக்டர்: எங்கள் ஆபீஸ்ல கேட்பாங்க மேடம். எந்த தலைவர் அறிக்கை விட்டாலும் அது அரசுக்கு செல்லும்.
தீபா: சரி.. இவரு என்ன அரசாங்கமா? முதல்வரா? தினகரன் யாருங்க.
இன்ஸ்பெக்டர்: அதுக்கு கேட்கலங்க.
தீபா: நான் எடப்பாடி பழனிச்சாமி பெயர்ல அறிக்கை கொடுக்கல சரியா. இவரு(தினகரன்) யாருன்னு முதல்ல சொல்லுங்க. சசிகலாவோட அக்கா பையன். அதனால அறிக்கை கொடுக்க கூடாதா? அவரு என்ன முதல்வரா, பிரதமரா சொல்லுங்க. நீங்க ஐபிஎஸ் அதிகாரி தானே?
இன்ஸ்பெக்டர்: இல்லை. ஐபிஎஸ் இல்லை மேடம்.
தீபா: நான் யாரு தெரியுமா? நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா? அவருக்கு என்ன அதிகாரம் இருக்குன்னு என்கிட்ட கேட்கிறீங்க.
இன்ஸ்பெக்டர்: இல்ல மேடம். நான் சொல்றது கேட்டுவிட்டு பேசுங்க.
தீபா: ஒரு தலைவரை பற்றி அறிக்கை விட்டால் நீங்க கேட்கலாம். தினகரன் தலைவரே இல்லை.
இன்ஸ்பெக்டர்: சரி விடுங்க. உங்க அறிக்கையே வேண்டாம், வேண்டாம், வேண்டாம் உங்க அறிக்கையே வேண்டாம் மேடம்.
இவ்வாறு ஆடியோவில் உரையாடல் பதிவாகி உள்ளது.
