deepa complaint against deepak
என்னை கொலை செய்யவே, தீபக் மூலம் டிடிவி.தினகரன் கோஷ்டியினர் போயஸ் கார்டனுக்கு வரவழைத்தனர் என தீபா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
போயஸ் கார்டன் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என தீபா குற்றஞ்சாட்டினார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது:-
இன்று காலை 4 மணி முதல் எனக்கு, எனது தம்பி தீபக் போன் செய்தான். என்னவென்று கேட்டதற்கு, அத்தை ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செய்ய வேண்டும் என கூறினார். ஆனால், அதை நான் பெரிதாக எடுக்கவில்லை.
இதையடுத்து, எனது பாதுகாவலர் ராஜாவுக்கு போன் செய்து, உடனே அழைத்து வரவேண்டும் என கூறினார். தொடர்ந்து அவருக்கு போன் செய்ததால், நானும் அவருடன் வந்தேன்.
எங்களுடன் ஒரு தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் வந்தார். அவர், படம் பிடித்தபோது, அவரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். இதற்கு முழு காரணம், தீபக் தான்.
உள்ளே நடந்த பிரச்சனையை கண் எதிரில் பார்த்ததால், எனக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக எனது கணவர் மாதவனுக்கு போன் செய்து வரவழைத்தேன். எனக்கு இங்கு வரவேண்டிய வேலை இல்லை. அதுபோன்ற எண்ணமும் இல்லை.
எனக்கு போலீஸ்காரர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனது வீட்டுக்கு கடந்த ஒரு வாரமாக அடிக்கடி வந்து மிரட்டி செல்கிறார்கள். தற்போது, சசிகலா மற்றும் தினகரன் தூண்டுதல் பேரில் என்னை கொலை செய்வதற்காக தீபக் வரவழைத்தான்.
என் அத்தை ஜெயலலிதாவின் சாவில் தீபக் சம்பத்தப்பட்டு இருக்கிறான். சசிகலா, டிடிவி.தினகரனுடன் சேர்ந்து அவனும் எங்கள் அத்தையை கொலை செய்துவிட்டான். அவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
