தனியார் ஆம்னி பேருந்துகள் இரு மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஒருபுறம் கொரோனாவை காரணம் காட்டி வேலை செய்யும் நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்து வருகின்றன. வேலை வாய்ப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மறுபுறம் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அனைத்து வகையிலும் விலைவாசி உச்சத்தை தொட்டு வருகின்றன.

இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்து இயக்க நெறிமுறைகளை அரசு அளித்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. தற்போதைய 3ம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆம்னி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்பில் ஆம்னி பஸ் இயக்க அனுமதி வழங்கியதும் தற்போது ஒரு கி.மீ.,க்கு ரூ.1.60 இருக்கும் கட்டணம் ரூ.3.20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்பதாலும், டோல்கேட் கட்டண உயர்வாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆம்னி பஸ்கள் இயக்க நெறிமுறைகளை அரசு, அளித்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.