ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் சுமார் 200 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் இதற்கான தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரத்தில்  பிரச்சனை நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதையடுத்து  இரு நாடுகளுக்கும் இடையேயான பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமென பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதுடன் இதை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்து சீனாவின் உதவியுடன் ஐநா மன்றம் வரை கொண்டு சென்றுள்ளது. 

அதாவது  காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் , ஐநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் இந்தியாவின் மீது கடும் ஆத்திரத்தில் உள்ள பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையில் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. மறுபுறம் பாகிஸ்தானை மையமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற  பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை இந்திய பாதுகாப்பு படையினர் கண்கொத்தி பாம்பாக இருந்தது இப்பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்து வருகிறது. 

இந்நிலையில் நேற்றைய முன்தினம்  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள ரங்ரித்  என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் குழுவாக பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  அப்பகுதியை இன்று  மாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இச்சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் மற்றுமொருவர் சரணடைந்தார். அதனையடுத்து அந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் மாநில ஐஜி விஜயகுமார், இந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா மீர்  கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஹிஸ்புல் முஜாகிதீன் முன்னாள் தளபதியான ரியாஸ் நைகோ கடந்த மே மாதம் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை அடுத்து அந்த அமைப்பின் தலைமை தளபதி பொறுப்பை ஷைப்புல்லா மீர் ஏற்று நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட மற்றொரு பயங்கரவாதியிடம் சதி திட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்  ஜம்மு-காஷ்மீரில் இதுவரை எத்தனை பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொள்ளப்படுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை  தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.  அத்தரவுகளின் படி மத்திய ரிசர்வ் காவல் படை, இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை போன்ற இந்தியப் படைகள் இந்த ஆண்டு அதிகபட்சமாக ஜூன் மாதத்தில் சுமார் 49 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம். இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல்  மாதத்தில் 28 பயங்கரவாதிகளும் ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 21 பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அக்டோபர் வரை மொத்தம் அதிகபட்சமாக தெற்கு காஷ்மீரில் 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதக் குழுக்களில் அதிக அளவில் சேர்ந்துவரும்  சோபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் 98 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனின் 28 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளன. இதேபோல் ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 59 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது வின் 37 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மற்ற 32 பயங்கரவாதிகள் இஸ்லாமிய அமைப்பு (ஐஎஸ்) உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.