மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முகமாகவும், இந்தியாவின் தவிர்க்கமுடியாத அரசியல் ஆளுமைகயாகவும் விளங்கியவர் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சிலர் கொஞ்சமும் மனசாட்சியற்ற கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவருடை மகள் என்றும், அதை செய்தோம், இதை செய்தோம் என்றும் சிலர் அவதூறு பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என விவேக் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைந்த போது வெற்று பரபரப்புகளுக்காக சிலர், இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்பியபோது காலப்போக்கில் இவையெல்லாம் காணாமல் போகும் என்று எண்ணி பொறுமையாக இருந்தோம்.

ஆனால் ஜெயலலிதா மறைந்து ஒரு ஆண்டு ஆன பின்பும், எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சிலர் கதை, கற்பனைகளை கிளப்பிவிட்டு ஒரு மாபெரும் தலைவியின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது  கொஞ்சமும் சகிக்கமுடியாக மனசாட்சியற்ற செயல் என தெரிவித்துள்ளார்.

இத்தகைய அவதூறுகளை கழகத்தின் தொண்டர்கள் ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும்,  தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்ந்த மாபெரும் தலைவியின் புகழை குறைக்கும் செயல்களை அவர் உருவாக்கிய ஆட்சியின் மூலம் பதவிக்கு வந்தவர்கள் கண்டிக்கவோ, தடுக்கவோ செய்யாமல் இருந்தாலும் போயஸ் கார்டனில் அம்மால் வளர்க்கப்பட்டவனாகிய எனக்கு அந்த பொறுப்பு இருக்கிறது என விவேக்  தெரிவித்துள்ளார்.

மக்கள் போற்றும் தலைவியாக இன்றளவும் நினைவில் வாழும் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் இனி யார் ஈடுபட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஜெயராமன் எச்சரித்துள்ளார்..