நேரக்கட்டுப்பாடு என்பது மே 3-ம் தேதி வரை அமுலில் இருக்கும் எனவும் எந்தவித தளர்வும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா  தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் காலை 6 மணிமுதல் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இருப்பினும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் பொருட்டு நாளை முதல் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள்  இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எந்தவித தளர்வும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லி வருகிறார். அதுவும் இந்த நேரத்தில் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.