பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில், வளர்ச்சி, வேலை வாய்ப்புத் தருவோம் என்று கூறி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த  பாஜக,  ஒரு தனிப் பாதை வகுத்து சென்னை தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) செத்த மொழியான சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க உத்தரவிட்டுள்ளது. இது இந்தி திணிப்பைவிட கொடுமையானதாகும். எனவே இந்த சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து டிசம்பர் 5 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு: 

அனைத்து மக்களின் வரிப் பணத்தில் நடப்பது தூர்தர்ஷன் என்ற அரசு தொலைக்காட்சி. இதில், கேட்பாரற்ற, கேட்டாலும் புரிவார் இல்லாத, நடைமுறையில் தேவை சிறிதுமற்ற முறையில், செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிருதத்தை தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி - திட்டமிட்டே திணிப்பது ஜனநாயகம் ஆகாது; பச்சைப் பாசிச முறையாகும்! இது இந்தித் திணிப்பைவிட மிக மோசமான திணிப்பு
மொத்தம் உள்ள 22 மொழிகளில் இது வெகுமக்களுக்குச் சம்பந்தமில்லாத ‘‘தேவ பாஷை’’ என்ற மகுடம் சூட்டிக் கொண்ட ஒரு மொழியாகும்.

மற்ற 21 மொழிகளை ஆட்சி மொழியாக்கி அந்தந்த வட்டாரங்கள், மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் ஆட்சிப் பணிகள் - மற்றும் மத்திய அரசின் தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுவதே அனைவருக்கும் மனநிறைவளிக்கும் முறை ஆகும், ஆனால் தற்போது தேவையின்றித் திணிக்கும் சமஸ்கிருத திணிப்பைத் திரும்பப் பெற வேண்டும் - நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு இதுபோன்ற திணிப்புகளால் அதற்கு வெடி வைத்துத் தகர்த்திடும் முயற்சிக்கு முன்னுரை எழுதுகிறது!  

எனவே இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு முன்னால் டிசம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.