டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்து முறையிட ஆளுநர் மாளிகை வந்துள்ளனர். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. 

பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. 

பின்னர் பேசிய ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் இரட்டை இலையை மீட்டு கட்சியை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்தனர். மேலும் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். 

இதையடுத்து டிடிவி தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து, விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஷ்வரி இன்று தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகரை சந்திக்க ராஜ்பவனுக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.