பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், அக்கரை, போரூர் உள்பட 8 இடங்களில்  மாநகராட்சி சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வரும்  சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  நாடாளுமன்ற உறுப்பினரகள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். 

மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் கீழ் வரும் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் முன்னாள் மத்திய அமைச்சரும்  எம்.பியுமான தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 
கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு செலவு செய்யாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என விமர்சித்தார். ஊராட்சி பகுதிகளாக  இருக்கின்றபோது அமைக்கப்பட்ட சுங்க சாவடிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும் அகற்றப்படாமல் தமிழக அரசு சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பொது மக்களை சுரண்டுகிறது என்றார். 

முதல்வர் பதவியில் இருக்கின்ற போதே சிறைக்கு சென்ற தலைவரை கொண்டிருந்த கட்சி அதிமுக. தமிழக அரசை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் மிரட்டுகிறார் என கூறினார். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொடர விமர்சனங்களுக்கு குறித்த கேள்விக்கு, 6 அறிவு கொண்ட மனிதர்களுக்கு பதிலளிக்கலாம்.  ஐந்தறிவு ஜீவன்களுக்கு தன்னால் குலைக்க முடியாது என்று தெரிவித்தார். தயாநிதி மாறனின் இந்த விமர்சனம் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.