Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசு out ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!

மாநகராட்சிப் பணிகளை தனியார்மயமாக்கும் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

day when the dmk govt is out is not far away says ops
Author
First Published Nov 8, 2022, 12:22 AM IST

மாநகராட்சிப் பணிகளை தனியார்மயமாக்கும் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக; பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்கும்போது அதனை எதிர்த்து குரல் கொடுத்து தனியார்மயத்தின் எதிர்ப்பாளர் போல் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பணிகளையே தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கின்றதைப் பார்க்கும் போது பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி, பதவிக்காக கொள்கையைத் துறக்கக்கூடாது என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகிறது.

இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.. எடப்பாடி பேசினால் நான்..! முடிச்சு போட்ட ஓபிஎஸ் !

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை தலைகீழாக பின்பற்றும் நிலைக்கு, பதவிக்காக, தன்னலத்திற்காக எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு திமுக வந்துவிட்டது என்பதையே அண்மைக்கால திமுக அரசின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே தனியார்மயம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் பணிகளை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்ததை எதிர்த்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, தொழிலாளர்களுக்கு ஆதரவாக நான் அறிக்கை வெளியிட்டேன். ஆனால், திமுக மவுனம் சாதித்தது. தற்போது, சென்னை பெரு மாநகராட்சி தவிர்த்து, 20 மாநகராட்சிகளில் உள்ள பணிகளை வெளிமுகமை, அதாவது Outsourcing மூலம் மேற்கொள்ள திமுக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதையும் படிங்க: 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காரணமே காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் கட்சி வரவேற்பு !

இந்த ஆணையில் 35,000க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்களை 3,500 பணியிடங்களாக குறைத்துள்ளதாகவும், தற்போது பணியாற்றி வரும் பணியாளர்கள் ஓய்வு பெற்றபின் அந்தப் பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும், அந்தப் பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகத் செய்திகள் வருகின்றன. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரயில்வே தனியார்மயம் ஆவதைக் கைவிடவும்; வங்கித் துறையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடவும்; ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை தனியார்மயம் ஆக்கும் முயற்சியை கைவிடவும் வலியுறுத்துவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மாநகராட்சிப் பணிகளையெல்லாம் வெளிமுகமைக்கு கொடுப்பது நியாயமா? இது.

இதையும் படிங்க: உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல... முத்தரசன் கண்டனம்!!

தனியார்மயமாக்கும் நடவடிக்கை ஆகாதா? ஊருக்குதான் உபதேசமா? ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது என்று கூறி அதற்கான புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி குறை கூறுவதும், மறுபுறம் வேலையில்லாத் திண்டாட்டத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசே எடுப்பதும் தர்மமா? கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்த திமுக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பணிகளையும் கார்ப்பரேட்மயமாக்கிக் கொண்டுவருகிறது. இது திராவிட மாடல் அரசு அல்ல. கார்ப்பரேட் மாடல் அரசு. சொல்லிலும் செயலிலும் முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழிதான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியை கண்டித்து நவ.15 மாபெரும் போராட்டம்… அறிவித்தார் அண்ணாமலை!!

தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் திமுக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மாநகராட்சிப் பணிகளை தனியார்மயமாக்கும் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, outsourcing முறையைக் கடைபிடிக்கும் திமுக அரசு out ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios