Asianet News TamilAsianet News Tamil

மும்பையில் பிடிபட்டவனுக்கு மூன்று நாள் காவல்... சென்னைக்கு அழைத்துவரப்படும் தஷ்வந்த்...

dashwant brought to chennai today night after mumbai court granted 3 day custody
dashwant brought to chennai today night after mumbai court granted 3 day custody
Author
First Published Dec 9, 2017, 5:28 PM IST


மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் இன்று விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப் படுகிறார். 

தனது தாய் சரளாவைக் கொன்ற தஷ்வந்த், தப்பி ஓடினான். அவனை பல இடங்களில் தேடி, மும்பையில் இருப்பதை உணர்ந்த தனிப்படை போலீஸார், மும்பையில் அவனைக் கைது செய்தனர். ஆனால், அவன் தனிப்படை போலீஸாரிடம் இருந்து தப்பித்துச் சென்றான். 

பின்னர், மும்பை போலீஸாரின் உதவியுடன் அவன் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்டான். அவனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிமன்றம், தஷ்வந்தை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதுடன் டிச.12ஆம் தேதி விசாரணைக்கு பின்னர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதை அடுத்து இன்றிரவு தஷ்வந்தை சென்னை அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி பாபு என்பவரின் மகளான ஹாசினி என்கிற 7 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தான்.

பின்னர் நகைக்காக பெற்ற தாயையே கடந்த வாரம் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பிச் சென்றான். அங்கே சென்ற தனிப்படை போலீசார், கடந்த 6ம் தேதி தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

மும்பை பாந்தாரா நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்திவிட்டு, சென்னை அழைத்துவரும் முன்னதாக ஹோட்டலில் உணவருந்திய போது, கழிவறை சென்றுவருவதாகக் கூறி கைவிலங்கை அகற்ற சொல்லியுள்ளான். போலீசார் கைவிலங்கை அகற்றிய மாத்திரத்தில், மின்னல் வேகத்தில் தஷ்வந்த் தப்பியுள்ளான்.

அப்போது தஷ்வந்தைப் பிடிக்க முயன்ற குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற தஷ்வந்த்தை பிடிக்க சென்னையைச் சேர்ந்த மற்றொரு தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். மும்பை போலீசாரின் உதவியுடன் தமிழக தனிப்படை போலீசார் மும்பை முழுவதும் வலைவீசி தேடினர். 

சிறுமி ஹாசியை பலாத்காரம் செய்து கொலை செய்தது, தாயை கொலை செய்தது ஆகிய வழக்குகளோடு சேர்த்து காவல்துறையின் பிடியிலிருந்து தப்பியோடியதாக இந்திய தண்டனைச் சட்டம் 224-வது பிரிவின் கீழும் தஷ்வந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

தஷ்வந்தின் புகைப்படத்தைக் கொண்டு மும்பை போலீசார் விடிய விடியத் தேடினர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களில் அவனது புகைப்படத்தை அனுப்பிவைத்து போலீசார் தேடினர். 

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு மும்பையின் அந்தேரி பகுதியில் வைத்து தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர். மும்பையில் வழக்கு பதிவானதால், அங்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை அடுத்து, நீதிமன்றம் 3 நாள் நீதிமன்றக் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதை அடுத்து, தஷ்வந்தை தமிழகத்துக்கு அழைத்துவந்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios