கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை ஆப்ரேஷன் தாமரை என்ற பெயரில் பாஜக கவிழ்த்துவிட வேண்டும் என பல மாதங்களாக துடித்து வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாகவே ஆட்சி இப்போது கவிழ்ந்துவிடும், அப்போது கவிழ்ந்துவிடும் கர்நாடகா பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா கூறி வருகிறார்.

இந்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான  ராமலிங்கரெட்டியும் ஒருவர்.

மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்த மற்றொரு மூத்த தலைவர் எச்.விஸ்வநாத்தும் ராஜினாமா செய்துள்ளார்.  அவர் தலைமையில்  2 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் நேற்று ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வஜூபாய் வாலாவையும் எச்.விஸ்வநாத் தலைமையிலேயே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி இருந்தனர். தற்போது ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இதையடுத்து குமாரசாமி அரசு விரைவில் கவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வேணு கோபால் இன்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்துப் பேசுகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்கள் கட்சி மாறாமல் இருக்க அவர்கள் மும்பையில் உள்ள  ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.