திமுகவுக்கு ஒன்னு மட்டும் சொல்றேன்! அம்மா சொல்லை வேண்டுமானால் நீங்க நீக்கிவிடலாம்.. ஆனால்.. சசிகலா ஆவேசம்.!
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களை மூடுகின்ற நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடுங்கள்.
அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளை சேதப்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக தலைமையிலான ஆட்சியில் சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரிய நாராயணா சாலையில் செயல்பட்டு வருகின்ற அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அகற்றியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அம்மா உணவகங்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்று திமுகவினரின் சிறுபிள்ளைத்தனமான செயல்களை தமிழக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையும் படிங்க;- ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய சாமானிய மக்கள், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சாலைகளில் வசிப்போர் என பல்வேறு தரப்பினருக்கும், மூன்று வேளைகளிலும், குறைந்த விலையில், சத்தான மற்றும் சுகாதாரமான உணவு கிடைக்கப்பெற வேண்டும், தமிழகத்தில் ஒருவர்கூட பசியோடு இருந்துவிடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் 'அம்மா உணவகங்கள். இது எந்த ஒரு அரசியல் கட்சியினருக்கும் சொந்தமானது கிடையாது. எனவே, திமுகவினருக்கு அம்மா உணவகத்தை மூடுவதற்கு எந்தவிதத்திலும் உரிமை கிடையாது. மேலும், இதுபோன்று அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளை சேதப்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், அதேபோன்று, பெயர் பலகைகளை அப்புறப்படுத்திய அம்மா உணவகங்களில் எல்லாம் மீண்டும் அதே 'அம்மா உணவகம்' என்ற பெயர் பலகைகளை வைத்திட வேண்டும் என்றும் இந்த ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அதாவது, எந்த ஒரு அரசாக இருந்தாலும் அது தன் மாநில மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது நல்ல திட்டங்களை அளிக்க வேண்டும். அவ்வாறு முடியவில்லை என்றால் நம் அம்மா அவர்களைப் போன்று நல்லவர்களால் உருவாக்கப்பட்ட திட்டங்களை மக்கள் நலன் கருதி பேணிப் பாதுகாத்திடவேண்டும். அப்படியில்லாமல், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் மக்கள் நலத் திட்டங்களை கெடுப்பதோ, அழிப்பதோ தர்மம் ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அம்மா உணவகங்களில் சமைப்பதற்கு தேவையான அளவு மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது 800 இட்லி தயாரிக்கும் அம்மா உணவகத்தில் அதற்கு வேண்டிய சாம்பார் வைப்பதற்கு தேவையான காய்கறிகளை வழங்காமல், மிகக் குறைந்த அளவில் தரும்போது அதைவைத்து சமைக்க இயலாத சூழ்நிலையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே, திமுகவினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதாவது பெயர் பலகையில் இருக்கின்ற அம்மா என்ற சொல்லை வேண்டுமானால் நீங்கள் நீக்கிவிடலாம், ஆனால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை யாராலும், எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களை மூடுகின்ற நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என சசிகலா கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.3000 ரொக்கமாக வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்தும் ஓபிஎஸ்