துவண்டு கிடக்கும் தனது கட்சியை தலை நிமிர்த்துவதற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்கு பகுதியில்தான் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். 
இதன் ஒரு நிலையாக இந்த மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் மண்டல மாநாடு ஒன்றை நடத்துகிறது தி.மு.க. இதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்த மாநாட்டை காரணம் காட்டி கொங்கு மண்டல தி.மு.க.வினர் கடும் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாக ஸ்டாலினுக்கு பெரும் புகார் பறந்திருக்கிறது. 

இந்த புகாரை தனக்கு உண்மையான சீனியர்கள் சிலரை விட்டு விசாரிக்க சொன்னாராம் அவர். தீர விசாரித்தவர்கள் ‘மாநாடு பெயரை சொல்லி வசூலில் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் நமது நிர்வாகிகள் பலர். இதனால் வணிகர்கள், கல்வி நிறுவணங்கள், தொழில் அதிபர்கள், தியேட்டர் மற்றும் பட விநியோகஸ்தம் செய்யும் சினிமா துறையினர் என எல்லோரும் கடும் காட்டத்தில் இருக்கிறார்கள். ’கட்சிக்காரர்களை அடக்க மாட்டேங்கிறாரே!’ என்று அவர்கள் உங்கள் மேல்தான் அப்செட்டில் இருக்கின்றனர். இந்த விவகாரம் உங்கள் பெயரை பெருமளவு டேமேஜ் செய்து வருகிறது. எனவே உடனடி ஆக்‌ஷன் தேவை!’ என்று ரிப்போர்ட் தந்துள்ளார்களாம். 

மேலும் அவர்கள் தங்கள் ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கும் மிக முக்கிய தகவல்கள்...

*    அடுத்த ஆட்சி நம் கட்சியின் ஆட்சிதான் என்றும், அதிகாரத்துக்கு வந்ததும் பல வசதிகளை செய்து தருகிறேன்! என்று சொல்லியும் நம் நிர்வாகிகள் வசூல் செய்கிறார்கள். 

*    கட்சி கொடுத்திருக்கும் நன்கொடை வசூல் புத்தகம் போக, எந்த அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லாமல் போலியாக வசூல் புக் அச்சடித்து வசூல் பறக்கிறது. 

*    ஒரு லட்சத்தில் ஆரம்பித்து, வெறும் நூறு ரூபாய் கூட வசூல் செய்கிறார்கள். 

*    ஒன்றிய மற்றும் கிளைகளை சேர்ந்தவர்கள் இதற்காக வாடகை கார் எடுத்துக் கொண்டு வீதி வீதியாக கடைகளில் வசூல் செய்யவும் தவறவில்லை. 

*    சிலர் அ.தி.மு.க. சார்பு தொழில் அதிபர்களிடம் கூட வசூல் நடத்தியிருப்பது உண்மை. ’உங்க கட்சி படுத்துடுச்சுன்னு உங்களுக்கே தெரியும். அடுத்து எங்க ஆட்சி வந்துடும். அப்பவும் உங்க தொழிலோட மவுசு குறையாம பார்த்துக்குறேன்!’ அப்படின்னு சொல்லி வசூல் செய்கிறார்கள்.

* கேவலம் ஹோட்டல்கள், பேக்கரிகளில் நிதி தராவிட்டால் சில நிர்வாகிகள் அங்கே சாப்பிட்டுவிட்டு அதையே ‘மாநாடு உதவியாக எடுத்துக்குறோம்’ என்று சொல்கிறார்களாம். 
...என சொல்லியிருக்கின்றனர். 

இதையெல்லாம் பார்த்து தலையிலடித்திருக்கிறார் தளபதி!
பாவம் வேறென்ன செய்ய முடியும்?