விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்  குறித்து திமுகவினர் ஆய்வு நடத்தினர்.  தொகுதிக்குள் இருக்கும் 275 வாக்குச் சாவடிகளில் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் திமுகவுக்கு வாக்கு அதிகம் விழுந்திருக்கிறது என்ற பட்டியலைத் திமுகவினர்தயாரித்துள்ளனர்.

275 வாக்குச்சாவடிகளில் 21 வாக்குச்சாவடிகளில் மட்டும்தான் திமுக வேட்பாளர் புகழேந்தி கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி நகரம் தவிர வெங்காமூர், சங்கீதமங்கலம், செலவானூர், அன்னியூர், டட் நகர், அரியலூர் திருக்கை, நங்காத்தூர், அகரம் சித்தாமூர், நரசிங்கனூர், வி.சாத்தனூர், தொரவி, ரெட்டிகுப்பம், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 18 வாக்குச்சாவடிகளும் தலித் வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகள்.

இந்த 18  வாக்குச் சாவடிகளில் மட்டுமே திமுக அதிக ஓட்டு வாங்கியுள்ளது. மீதியுள்ள 254 வாக்குச் சாவடிகளிலும் திமுக பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதிலும் சுமார் ஐம்பது சதவிகித வாக்குச் சாவடிகளில் திமுகவை விட அதிமுக கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  ஏதோ வன்னியர்கள்தான் தங்கள் வாக்குகளை திமுகவுக்கு அள்ளிக் கொட்டிவிடப் போகிறார்கள் என்பது மாதிரி வன்னியர்களைப் பற்றியே அதிகம் பேசினார். 

பிரச்சாரக் களத்திலும் திமுக வன்னியர் பிரமுகர்களை அதிகம் ஈடுபடுத்தினார். இருபது சதவிகித இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி திமுகவுக்கு தலித் வாக்காளர்கள்தான் அதிக வாக்குகளை அளித்திருக்கிறார்கள் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.