தலித்துகளின் வாக்கு வங்கியை எப்படியாவது தமதாக்கிக் கொள்ள மிகவும் கவனத்துடன் டி.டி.வி தினகரன்  காய் நகர்த்தி வருகிறார். என்ன தான் தினகரன் அ.ம.மு.க என்கிற பெயரில் கட்சி நடத்தினாலும் அவரது கட்சிக்கு முக்குலத்தோர் கட்சி என்று ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது. தினகரன் உடன் இருப்பவர்கள் தொடங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரை பலரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இதனால் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தென் மாவட்டங்களில் தினகரன் கட்சி என்றால் ஒரு அடி தள்ளியே நிற்கின்றனர். 

இந்த நிலையை மாற்றி அ.ம.மு.க அனைவருக்குமா கட்சி என்று நிறுவ தினகரன் அவ்வப்போது பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தேவர் குரு பூஜை மட்டும் அல்லாது அனைத்து ஜாதியை சேர்ந்த தலைவர்களின் நினைவு மற்றும் பிறந்த நாள்களில் தவறாமல் அந்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிடுகிறார் தினகரன். அதிலும் தலித்துகள் வாக்கு வங்கி விவகாரத்தில் தினகரன் மிகவும் கவனமாக இருக்கிறார். ஏனென்றால் முக்குலத்தோர் கட்சி என்கிற முத்திரை தலித் வாக்குவங்கியை தான் பாதிக்கும் என்று தினகரன் கருதுகிறார். எனவே தான் மற்ற தலைவர்களின் நினைவு நாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட தலித் தலைவர்களின் நினைவு தினங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். 

கடந்த மாதம் வேலூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவோடு இரவாக அங்கிருந்து கார் மூலமாகவே நெல்லை சென்றார். காரணம் மறுநாள் தலித்துகளின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஒண்டி வீரன் நினைவு நாள். நேரில் சென்று மரியாதை செலுத்தியே ஆக வேண்டும் என்று சுமார் 600 கிலோ மீட்டர் காரிலேயே பயணம் செய்து ஒண்டி வீரன் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தினகரன். இதே போலத்தான் 2வது ஆண்டாக தொடர்ந்து பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் குரு பூஜையிலும் தினகரன் கலந்து கொண்டார். 

கடந்த ஆண்டும் நேரில் சென்று இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்திய நிலையில் தற்போது 2வது ஆண்டாக நேரில் சென்றுள்ளார் தினகரன். இந்த முறை வழக்கத்தை விட அதிக அளவில் தினகரனை வரவேற்க கூட்டம் காணப்பட்டது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தினகரன் மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டார் தினகரன். மேலும் தான் எதிர்பார்த்தபடியே தலித்துகள் திரண்டு தனக்கு வரவேற்பு அளித்தது அவருக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.