கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு. இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை கடந்த 5-ம் தேதி அன்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணத்திற்கு பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இந்நிலையில், இவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆசைவார்த்தை கூறி கடத்தி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தன்னை சிலர் மிரட்டுகிறார்கள். எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கிடையே தம்மை யாரும் கடத்தவில்லை என்று மணப்பெண் சவுந்தர்யா நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் சவுந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்எல்ஏ பிரவும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், சாமிநாதன் தாக்கல் செய்த மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை இன்று நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

அதன்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள். இதனையடுத்து, சவுந்தர்யாவிடமும், சாமிநாதனிடமும் தனித்தனியே அழைத்து அவர்களது நிலைப்பாட்டை கேட்டறிந்தனர். இதில், சவுந்தர்யா முழு மனதுடன் எம்எல்ஏவை திருமணம் செய்திருப்பதாகவும் தம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தந்தையுடன் செல்ல விருப்பமில்லை என்றும், கணவர் பிரபுடன் செல்வதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.