உத்தர பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்ததால், தலித் வழக்கறிஞர்கள் சிலர், அம்பேத்கரின் சிலையை பால் மற்றும் கங்கை நீரை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். 

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அம்மாநில பாஜக மாநில செயலாளர் சுனில் பன்சால் என்பவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த தகவலை அறிந்த தலித் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர், அம்பேத்கரின் சிலை மீது பால் மற்றும் கங்கை நீரை ஊற்றி சுத்தம் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக பேசிய வழக்கறிஞர் ஒருவர், பாஜகவை சேர்ந்த சுனில் பன்சால் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ராகேஷ் சின்ஹா ஆகிய இருவரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். இதனால் அம்பேத்கர் சிலை அசுத்தமடைந்துவிட்டது. அதனால்தான் பால் மற்றும் கங்கை நீரை ஊற்றி சுத்தம் செய்தோம். பாஜக அரசு தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை கையாள்கிறது. ஆனால் தலித் மக்களின் வாக்கு வங்கியை கவரும் விதமாகவும் தங்கள் கட்சியை வளர்த்து கொள்வதற்கும் அம்பேத்கர் பெயரை பாஜகவினர் பயன்படுத்துகின்றனர் என குற்றம்சாட்டினார். 

முன்னதாக, கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியிலுள்ள பழமையாக கோயில் ஒன்றில் பாஜக எம்எல்ஏ மனிஷா அனுராகி வழிபட்டார். அவர் கோயிலை விட்டு சென்றபின் கங்கை நீரால் அந்த கோவில் சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.