எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு பொது மக்களின்  தினசரி செலவுகளை அதிகரிக்கும் என்றும், சாமானிய மனிதனுக்கு சிரமங்களை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,  இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தயுள்ளார்.

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மானியம் முழுவதையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு ,  பொதுமக்களிடையே கடும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  பினராயி விஜயன் எரிவாயு மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு  தினசரி செலவுகளை அதிகரிக்கும் என்பதால் சாமானிய மனிதனுக்கு சிரமங்களை மட்டுமே ஏற்படுத்தும் என கூறினார்.

சிலிண்டர் மானிய ரத்து என்ற இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கடந் ஜுலை 2016 வரை எரிவாயு சிலிண்டர் விலை 10 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த மாதம் மட்டும் 32 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 420 ரூபாயாக இருந்த மானிய சிலிண்டர் விலை இப்போது 480 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வு, மானியம் ரத்து போன்றவை பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.