பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் பக்கத்து அறையில் இருந்த ‘சீரியல் கில்லர்’ ‘சயனைடு மல்லிகா’ பெலஹாவி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள பழமையான சிறையான பெலஹாவியில் உள்ள ஹின்டால்கோ சிறைக்கு மல்லிகா மாற்றப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, இந்த 3 பேரும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி அடைக்கப்பட்டு இருந்த சிறை அறைக்கு பக்கத்து அறையில் கர்நாடகாவை கலக்கிய ‘சீரியல் கில்லர்’ ‘சயனைடு’ மல்லிகா என்ற கே.டி. கெப்பம்பா(வயது52) அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலா இருக்கும் அறைக்கு பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா அடைக்கப்பட்டு இருப்பதால், அவரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதைக் காரணம்காட்டி, சசிகலா தரப்பில் அவரின் வழக்கறிஞர்கள் தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான வேலையில் மும்முரம் காட்டினர்.

கடந்த 2014ம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது, சயனைடு மல்லிகா, ‘தான் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை, அவரை பார்க்க வேண்டும்’ என சிறை அதிகாரிகளிடம் பிடிவாதம் செய்து, முரண்டு பிடித்துள்ளார்.

ஆனால், கடைசி வரை ஜெயலலிதாவை பார்க்க சயனைடு மல்லிகாவை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், சசிகலா, இளவரசி இப்போது சிறையில் அடைக்கப்பட்டபின், சயனைடு மல்லிகா இருவரிடமும் மிகுந்த நட்புடன், கரிசனத்துடன் பழகியதாக சிறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சசிகலா சாப்பாடு வாங்க வரிசையில் நின்றால்கூட அனுமதிக்காமல், சயனைடு மல்லிகா தான் வலியச் சென்று வாங்கி வருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மல்லிகாவின் இந்த நடவடிக்கைகள் சசிகலாவுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பிடிக்கவில்லை. இதையடுத்து சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, சயனைடு மல்லிகாவிடம் முன்கூட்டியே எதையும் சொல்லாமல், அவரின் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படு என்று கூறிய சிறை அதிகாரிகள் அவரை, பெல்ஹாம் சிறைக்கு மாற்றியுள்ளனர் என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு அடுத்த சில அறைகளுக்கு அருகே மிகப்பெரிய கொலைக்குற்றவாளியான வழக்கறிஞர் சுபா சங்கர நாராயணன் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

யார் இந்த சயனைடு மல்லிகா ?

கர்நாடகாவின் சித்தரதுர்கா பகுதியைச் சேர்ந்த சயனைடு மல்லிகா என்ற கிரிமினல், நாட்டின் முதல் சீரியல் கில்லர் பெண்குற்றவாளி ஆவர். வசதியாக வாழ ஆசைப்பட்ட சயனைடு மல்லிகா,நகைக்காக ஏறக்குறைய 6 பெண்களுக்கு சயனைடு மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

மேலும், இவர் மீது  பல்வேறு வழக்குகள் உள்ளதையடுத்து, கடந்த 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு தூக்குத் தண்டனையும், அதன்பின் 2012-ல் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.