ஜெயலலிதா  வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டால் அவரது உறவினர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும், ஜெயலலிதா  மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தங்களது பூர்வீக சொத்து என்றும், தங்களது பாட்டி அதாவது ஜெயலலிதாவின் அம்மாவின் சொத்து என்றும் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் தெரிவித்திருந்தனர்.

அந்த சொத்து தங்களுக்கே சொந்தம் என்றும் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இது குறித்து  சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா இல்லம் குறித்து தீபா தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார். 

போயஸ் தோட்ட இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடும் உறவினர்களுக்கு சட்டரீதியாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.

ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு இழப்பீடு தந்த பின்னர்தான் போயஸ் தோட்ட இல்லம்  நினைவிடம் ஆக்கப்படும் என்றும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.