cv shanmugam condemns ops

மணல் மாபியா சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் ஓபிஎஸ் தான் என்றும், அவர் மீதான ஊழல் புகார்களை முதலில் விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, ஓர் அணியாக இணைய முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனையடுத்து இரு அணி இணையும் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

அதே நேரத்தில் இரு அணி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், மணல் மாபியா சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவரே ஓபிஎஸ் தான் என குற்றம் சாட்டினார். 

நம்பியாரும் அசோகனும் போல ஓபிஎஸ்சும் சேகர் ரெட்டியும் ஊழல் புலிகள். சேகர் ரெட்டியின் குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை ஓபிஎஸ் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோதுதான் சேகர் ரெட்டி தமிழக அரசின் சார்பில் திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் மீதான ஊழல் புகார்களை முதலில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் சண்முகம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில், விசாரணையை எதிர்கொள்ள ஓபிஎஸ் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.